சின்னசேலம் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை


சின்னசேலம் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை
x
தினத்தந்தி 8 March 2021 4:59 PM GMT (Updated: 8 March 2021 4:59 PM GMT)

சின்னசேலம் அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம்

விவசாயி

சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 45) விவசாயி. குடிப்பழக்கம் உள்ள இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பெருமாள் என்ற மகனும், பூவரசி என்ற மகளும் உள்ளனர். திருமணம் ஆன பெருமாள் மனைவியுடன் சேலத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பூவரசிக்கு உள்ளூரிலேயே திருமணம் நடந்துள்ளது. இதனால் மருதமுத்தும், சித்ராவும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு மனைவி சித்ரா கோபித்துக் கொண்டு செம்பாகுறிச்சி கிராமத்தில் உள்ள தனது கணவனுடைய அக்கா முத்துலட்சுமி வீட்டுக்கு சென்று தங்கிவிட்டார்.

படுகாயங்களுடன்

இதன் பின்னர் குடிபோதையில் இருந்த மருதமுத்து வீட்டில் தனியாக படுத்து உறங்கியுள்ளார். நேற்று காலை மருதமுத்துவின் வீட்டுக்கு சென்று அவரது மகள் பூவரசி பார்த்தார். அப்போது தலை, மார்பு ஆகிய இடங்களில் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மருதமுத்து இறந்து கிடந்ததை பார்த்து அவர் கதறி அழுதார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஒடோடி வந்தனர். மருதமுத்துவின் மார்பில் 2 இடங்களில் கத்தி குத்து காயங்களும், தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் யாரேனும் மர்மநபர்கள் வீடு புகுந்து அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் மருதமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூவரசி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? அவரை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story