பெட்ரோல் நிலையத்தில் மாற்ற முயற்சி; ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் அண்ணன்-தம்பி கைது


பெட்ரோல் நிலையத்தில் மாற்ற முயற்சி; ரூ.21 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 9 March 2021 5:20 AM GMT (Updated: 9 March 2021 5:20 AM GMT)

பெட்ரோல் நிலையத்தில் மாற்ற முயற்சி செய்த ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளுடன் அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

கள்ளநோட்டு

சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் அருகே காரணை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், பெட்ரோல் போட்டு விட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். அதை வாங்கி பார்த்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள், அது கள்ள நோட்டு என்பதை கண்டுபிடித்தார்.

உடனே பெரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பெரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சித்தாலபாக்கம் அரசன்கழனியில் துரித உணவகம் நடத்தி வரும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பங்கூர் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 32) என தெரியவந்தது.

அண்ணன்-தம்பி கைது

அவரிடம் விசாரித்த போது தனது அண்ணன் பிரகதீஸ்வரன் (35) தான் அந்த ரூ.500 நோட்டை கொடுத்ததாக கூறினார். அரசன்கழனியில் இருந்த பிரகதீஸ்வரனிடம் போலீசார் விசாரித்தனர். அவர், தாம்பரத்தைச் சேர்ந்த காசி என்பவர் தன்னிடம் அதை கொடுத்ததாக கூறினார்.

இதையடுத்து அண்ணன் பிரகதீஸ்வரன், தம்பி பிரபாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் 41 கள்ள நோட்டான 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினார்கள். கைதானவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 42 தாள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story