உடுமலை, குடிமங்கலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி நூதன மோசடி


உடுமலை, குடிமங்கலத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி நூதன மோசடி
x
தினத்தந்தி 9 March 2021 4:16 PM GMT (Updated: 9 March 2021 4:16 PM GMT)

தொழிலாளர்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி நூதன மோசடி

போடிபட்டி
உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தி ஒருசிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறை
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் நூற்பாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள், கயிறு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவையும் செயல்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் சமீப காலங்களாக தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர். பல வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். 
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல தொழில் நிறுவனங்களும் முடங்கின. இதனால் பல தொழிலாளர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்று விட்டனர். தற்போது தொழிலாளர் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 
கமிஷன்
இதனைப் பயன்படுத்தி ஒரு சிலர் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
உடுமலை, குடிமங்கலம் பகுதியில் விவசாயம் மிகப் பிரதானமான தொழிலாக உள்ளது. ஆனால் தற்போது பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் நூறு நாள் வேலைக்கு செல்வதால் விவசாயப் பணிகளுக்கே கூலி ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. இந்த சூழலில் தொழில் நிறுவனங்களில் கடினமான வேலைகளை செய்ய உள்ளூர் ஆட்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இதனால் வட மாநில தொழிலாளர்களையே பெருமளவு நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி ஒரு சில ஏஜெண்டுகள் கமிஷன் அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை கூட்டி வந்து வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.
அவ்வாறு அசாம், பீகார்,  ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துகின்றனர். அப்போது அந்த தொழிலாளர்களிடம் ஒரு தொகையையும், தொழில் நிறுவனங்களிடமிருந்து ஒரு தொகையையும் கமிஷனாக பெற்றுக் கொள்கின்றனர். தொழிலாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக கமிஷன் கொடுத்து தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த அனைவரும் தயாராக உள்ளனர்.
திருட்டு 
ஆனால் அதிலும் தற்போது சில மோசடி நபர்கள் புகுந்து விட்டனர். அவர்கள் சில வட மாநிலத் தொழிலாளர்களுடன் இணைந்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடி நபர்கள் தொழிலாளர்களை கூட்டி வந்து பணிக்கு அமர்த்தி கமிஷன் தொகையாக ரூ ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பெற்றுச் செல்கிறார்கள். நாங்கள் அந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் தொழில் பயிற்சி அளிக்கிறோம். இதனால் நேர விரயம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுகிறது. ஆனால் ஒருசில நாட்களில் இந்த தொழிலாளர்கள் இங்குள்ள விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்று விடுகிறார்கள்.
பின்னர் அதே தொழிலாளர்களை அந்த கமிஷன் ஏஜெண்டுகள் அடுத்த நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தி பணம் பெறுவதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதும் தொடர்கதையாக நடக்கிறது. பெரிய அளவில் திருட்டு போன்ற சம்பவங்களில் இவர்கள் ஈடுபடாததால் பெரும்பாலும் போலீசில் புகார் அளிப்பதில்லை. ஆனால் இந்த நூதன மோசடியால் மன உளைச்சலும், பண இழப்பும் ஏற்படுகிறது. இதுபோல திருப்பூர் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நூதன மோசடி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story