உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 6:27 PM GMT (Updated: 2021-03-09T23:57:42+05:30)

திருவாரூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளது. இதனால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று திருவாரூர் அருகே நடப்பூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.52 ஆயிரத்து 907-ஐ எடுத்து வந்தது தெரியவந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். 
பறிமுதல்
விசாரணையில் அவர் சூரணூரை சேர்ந்த ராமசந்திரன் மகன் ராஜ்குமார் என்றும், தனியார் நிதி நிறுவனம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் கடனாக கொடுக்கப்பட்ட பணத்தை வசூல் செய்து கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நேற்று முன்தினம் இரவு திருவாரூர் அருகே நாரணமங்கலம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அந்த வழியாக வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 241 புடவை, 41 ஜாக்கெட் துணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வலங்கமான்
வலங்கைமான் அடுத்த ஆலங்குடி பகுதியில் கும்பகோணம் மன்னார்குடி- மெயின் ரோட்டில் வலங்கைமான் மண்டல துணை தாசில்தார் மற்றும் தேர்தல் கண்காணிப்புநிலைக்குழு அலுவலர்ஆனந்தன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நீடாமங்கலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் டெம்போ வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டபோது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 497 எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் செலுத்தினர்.
பேரளம் 
இதைப்போல பேரளம் அருகே காரைக்காலில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை  பண்டாரவாடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர். சோதனையில்  மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.97 ஆயிரத்து 635 எடுத்து வந்தது தெரியவந்தது. இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் உபய வேதாந்தபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனை செய்த போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சம் எடுத்து சென்றது தரியவந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்  தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் பாணுகோபன் மற்றும் துணைத் தேர்தல் அதிகாரி கார்த்தி ஆகியோரிடம்  ஒப்படைத்தனர். இந்த பணம்  நன்னிலம் அரசுகருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்று கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.4 லட்சத்து 15 ஆயிரத்து 39 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story