திருக்குறுங்குடி பகுதியில் பலத்த மழை: 1000 நெல் மூட்டைகள் சேதம்
திருக்குறுங்குடி பகுதியில் பெய்த பலத்த மழையால் 1000 நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி பகுதியில் பெய்த பலத்த மழையால் 1000 நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
கொள்முதல் நிலையம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் அரசு சார்பில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு களக்காடு, ஏர்வாடி, டோனாவூர், திருக்குறுங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு 100 கிலோ சிறிய ரக நெல் ரூ.1,958-க்கும், பெரிய ரக நெல் ரூ.1,918-க்கும் எடுக்கப்படுகிறது. மேலும் டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. டோக்கன் பெற்று 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதால் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் திறந்த வெளியில் வைத்துள்ளனர்.
நெல் மூட்டைகள் சேதம்
இந்த நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆண்டு தோறும் தற்காலிகமாகவே கொள்முதல் நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிரந்தர கட்டிடம் இல்லை. எனவே நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடத்தில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story