கொடிக்குறிச்சியில் புதிதாக வாக்கு எண்ணும் மையம்: பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கலெக்டர் சமீரன் பேட்டி


கொடிக்குறிச்சியில் புதிதாக வாக்கு எண்ணும் மையம்:  பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கலெக்டர் சமீரன் பேட்டி
x
தினத்தந்தி 10 March 2021 2:20 AM IST (Updated: 10 March 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

கொடிக்குறிச்சியில் புதிதாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தென்காசி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் கலெக்டர் சமீரன் கூறினார்.

தென்காசி:
கொடிக்குறிச்சியில் புதிதாக வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தென்காசி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் கலெக்டர் சமீரன் கூறினார்.

புதிய வாக்கு எண்ணும் மையம்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இதற்கு முன்புவரை குற்றாலம் பராசக்தி கல்லூரி, புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரி மற்றும் நெல்லை கல்லூரிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. 

இந்த முறை 5 தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வசதியாக வாக்குகள் எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தென்காசி கொடிக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள யூ.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரியை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கலெக்டர் ஆய்வு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இருப்பதால் வாக்குகள் எண்ணும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கல்லூரி கட்டிடத்தில் 5 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. எந்தெந்த தொகுதிகளுக்கு எந்த கட்டிடத்தில் எண்ணுவது? எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது? என்பது குறித்து ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தேர்தல் தாசில்தார் சண்முகம், கல்லூரி தாளாளர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பேட்டி

பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்யப்பட்டு வருகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு 45 பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ எடுக்கும் பணி ஆகியன நடைபெற்று வருகின்றன. இந்த முறை புதிதாக வாக்குகள் எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணுவதற்கு யூ.எஸ்.பி. பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி இங்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து உள்ளோம். 

பதற்றமான வாக்குச்சாவடிகள்

சிறு, சிறு மாற்றங்கள், பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமராக்கள் எங்கெங்கு அமைப்பது? போன்றவை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். இந்த இடம் தென்காசி நகருக்கு அருகில் உள்ளது. 5 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் இந்த இடத்திற்கு எளிதாக வரமுடியும்.

தென்காசி மாவட்டத்தில் 96 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதல் போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீஸ் பார்வையாளர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் கூடுதலாக என்னென்ன வசதி செய்ய வேண்டும் என்பதை ஆலோசனை நடத்தி கூறுவார்கள். அதன்படி பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story