கணவருடன் சென்ற பெண்ணிடம் 16 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
வாடிப்பட்டி அருகே அரிவாளை காட்டி மிரட்டி கணவருடன் சென்ற பெண்ணிடம் 16 பவுன் தாலி சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாடிப்பட்டி,
சோழவந்தான் கள்ளர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவரது மனைவி சத்யதேவி (32). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு தங்களது குழந்தைகளுடன் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மேட்டுநீரேத்தான் பிரிவில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 வாலிபர்கள் கார்த்திகேயனின் மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் அரிவாளை எடுத்து குழந்தையின் கழுத்தில் வைத்து மிரட்டி சத்யதேவியிடம் 16 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யதேவி வாடிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story