வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் அறிவிப்பு
10 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களை கலெக்டர் அறிவித்து உள்ளார்.
கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை (13, 14 ஆகிய தேதிகளை தவிர்த்து) பெறப்படுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
மேலும் வைப்பு தொகையாக பொதுப்பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.5 ஆயிரம் ரொக்கமாகவோ அல்லது கருவூலம் மூலம் செலுத்தப்பட்ட செலானாகவே செலுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கான வேட்புமனுக்களை மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்திலும், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு சூலூர் தாசில்தார் அலுவலகத்திலும் அளிக்கலாம்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) அலுவலகத்திலும், கோவை வடக்கு தொகுதிக்கு தடாகம் சாலையில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மைய அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், கோவை தெற்கு தொகுதிக்கு கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை அளிக்க வேண்டும்.
சிங்காநல்லூர் தொகுதிக்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்திலும், கிணத்துக்கடவு தொகுதிக்கு மதுக்கரையில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலும்,
பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்திலும், வால்பாறை தொகுதிக்கு ஆனைமலை தாசில்தார் அலுவலகத்திலும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story