போலி ரசீதுகள் தயாரித்து ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்த தொழில் அதிபர் கைது
போலி ரசீதுகள் தயாரித்து ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்த கரூர் தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை, பொள்ளாச்சி, சேலம், கரூர் ஆகிய நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிளைவுட், செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் போலி ரசீதுகள் தயாரித்து மோசடி செய்வதாக கோவையில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குனர் ஜெனரல் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
அதன்பேரில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து கோவை, பொள்ளாச்சி, சேலம், கரூர் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.
இதில் ரூ.318 கோடி மதிப்புள்ள பொருட்களை சப்ளை செய்ததாக கூறி ரூ.40 கோடி உள்ளீட்டு வரியை (இன்புட் டேக்ஸ் கிரெடிட்) அரசிடமிருந்து பெற்றிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சப்ளை செய்த பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்காக வழங்கப்பட்ட ரசீதுகளை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது.
பிளைவுட் மற்றும் செராமிக் பொருட்கள் சப்ளை செய்யாமல் போலி ரசீதுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் ரூ.40 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கரூரை சேர்ந்த தொழில் அதிபரை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கூறுகையில், இந்த வரி ஏய்ப்பில் பயன்படுத்தப்பட்ட போலி ரசீதுகளை ராஜஸ்தானில் உள்ள மோசடி கும்பல் தயாரித்து கொடுத்துள்ளது. அந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட மோசடி கும்பல் தலைவனை தீவிரமாக தேடி வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story