பெரம்பூர், துறைமுகம் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.11 லட்சம், 16 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்


பெரம்பூர், துறைமுகம் தொகுதியில் வாகன சோதனையில் ரூ.11 லட்சம், 16 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 March 2021 11:23 AM IST (Updated: 10 March 2021 11:23 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூர், துறைமுகம் தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததாக ரூ.11 லட்சம், 16 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

பெரம்பூர்,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொகுதிவாரியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு கட்டமாக பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், மாநகராட்சி உதவி செயற்பொறியாளருமான சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று எம்.கே.பி. நகர் மத்திய நிழல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் ரூ.7 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதை கொண்டுவந்த சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த மிளகாய் வியாபாரி அரிகிருஷ்ணன் (வயது 45) என்பவரிடம், விசாரணை நடத்தியதில், அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.7 லட்சத்தை கைப்பற்றிய அதிகாரிகள், பெரம்பூர் தொகுதி தேர்தல் அதிகாரி ராஜகோபாலிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பெரம்பூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

அதேபோல் துறைமுகம் தொகுதியில் பூக்கடை ஈவ்னிங் பஜார் சாலையில் வெகுநேரமாக சொகுசு கார் நின்றிருந்தது. சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 4 லட்ச ரூபாய் பணம், 16 கிலோ வெள்ளி கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கார் டிரைவர் விநாயகம் (45) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.


Next Story