வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி சாலை அமைப்பு
நடுவட்டம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார், பைக்காரா உள்பட பல்வேறு இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குத்தகை அடிப்படையில் விவசாய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் டி.ஆர். பஜாரில் இருந்து பெல்வியூ பகுதிக்கு செல்லும் வழியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக சாலை அமைக்கப் பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
மேலும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பாறைகளும், மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் புதிதாக சாலை அமைத்த இடங்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை சார்பில் நடுவட்டம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறியதாவது:-
பெல்வியூ பகுதியில் பட்டா நிலம் உள்ளது. அதில் கட்டிடம் கட்ட அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் புதிய சாலை அமைக்க எந்த அனுமதியும் பெறவில்லை.
இதுதொடர்பாக நடுவட்டம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story