கொணவக்கரையில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள்
உணவு, தண்ணீர் தேடி கொணவக்கரையில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதையொட்டி பொதுமக்களுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி,
கோடைகாலம் நெருங்கி வருவதால், சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. நீர்நிலைகள் வறண்டு விட்டதாலும், பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் காட்டுயானைகள் இடம்பெயர தொடங்கிவிட்டன.
ஆனாலும், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளிலும் வறட்சி ஆரம்பித்து விட்டது. இதனால் காட்டுயானைகள் விவசாய நிலங்களை தேடி ஊருக்குள் வருவது அதிகரிக்க தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளி பகுதியில் இருந்து கோத்தகிரி அருகே அடர்ந்த வனப்பகுதியை கொண்ட கொணவக்கரை கிராமப்பகுதியில் குட்டியுடன் காட்டுயானை முகாமிட்டு உள்ளது.
ஆனால் அவை பொதுமக்களின் குடியிருப்பு பகுதிக்குள் வரவில்லை. எனினும் அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கொணவக்கரை வனப்பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளதால், அங்கு விறகு சேகரிக்க உள்ளிட்ட பணிகளுக்காக யாரும் செல்லக்கூடாது.
மேலும் அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் தனியாக நடமாடக்கூடாது. மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனமுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே வனப்பகுதியிலேயே அவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story