கோவையில் படிப்படியாக அதிகரிக்கும் கொரோனா
கோவையில் முகக்கவசம் அணியாததால் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது.
கோவை,
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை கொரோனா பாதிப்பு 100-க்கு அதிகமாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-க்கு குறைவாக இரட்டை இலக்கில் அதாவது 50-க்கு குறைவாக இருந்தது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று முன்தினம் 58 ஆகவும், நேற்று 63 ஆகவும் உயர்ந்தது. 57 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். நேற்று 359 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவையில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நேற்று முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
காரணம் என்ன
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது
கோவை மாநகராட்சியில் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறி இருந்தால் அவர் பரிசோதனை செய்து கொள்வதில்லை.
இதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று உறுதியாகிறது. அதன்பின்னர் அவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒருவருக்கு அறிகுறி ஏற்பட்டால் அவர் உடனே பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெறுவதின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும்.
மேலும் பொது இடங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் வலம் வருகிறார்கள். இதனால் தான் தொற்று பரவுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் அவருக்கு நோய் எதிர்ப்பு இருந்தால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் அவர் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவருக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது.
எனவே முகக்கவசம் அணிவதின் முக்கிய நோக்கமே மற்றவர்களுக்கு நோய் பரவுவதை தடுக்கவும், மற்றவர்கள் மூலம் நமக்கு தொற்று வராமலும் தடுப்பது தான்.
கோவை மாநகரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதின் மூலம் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story