கோவில் திருவிழாவின்போது மலைத்தேனீக்கள் கொட்டி 150 பேர் காயம் உடுமலை அருகே பரபரப்பு


கோவில் திருவிழாவின்போது மலைத்தேனீக்கள் கொட்டி 150 பேர் காயம்  உடுமலை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2021 11:24 PM IST (Updated: 10 March 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே கோவில் திருவிழாவில் மலைத்தேனீக்கள், கொட்டி 150 பேர்காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை
உடுமலை அருகே கோவில் திருவிழாவில் மலைத்தேனீக்கள், கொட்டி 150 பேர்காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கோவில் திருவிழா
உடுமலை அருகே  பாலப்பம்பட்டியில் ராஜகாளியம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவில் திருவிழா நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவிற்கு இந்த கிராமத்தை சேர்ந்தவர் மற்றும் அவர்களின் உறவினர்களும் வந்திருந்தனர். கோவிலில் நேற்று காலை மாவிளக்கு அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 
அதை தொடர்ந்து ராஜகாளியம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. திருக்கல்யாணம் வைபவம் கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலுக்குள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அம்மனை தரிசனம் செய்ய பெண்கள் மாவிளக்கு பூஜை பொருட்களுடன் உட்கார்ந்து இருந்தனர். 
மலைத்தேனீக்கள்
அப்போது அந்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் உள்ள தோப்பில் தென்னை மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து மலைத்தேனீக்கள் கூட்டம் கூட்டமாக திடீரென்று படையெடுத்து பறந்து வந்தன. அந்த தேனீக்கள், அங்கிருந்த பக்தர்களை ஆக்ரோஷமாக கொட்டியது. இதனால் பூஜை பொருட்களை அங்கேயே போட்டு விட்டு  பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். சிலர் கோவிலுக்குள் ஓடி ஒளிந்தனர். சிலர் அருகில் உள்ள மண்டபத்திற்குள்ளும், வீடுகளுக்குள்ளும் ஓடி கதவை பூட்டினர். ஆனால் தேனீக்கள்  விடவில்லை. பக்தர்களை விரட்டி விரட்டி கொட்டியது. சாலை வழியாக தப்பித்து ஓடிய பக்தர்களையும், தேனீக்கள்  துரத்திச் சென்று கொட்டியது. இதனால் பலர் வலி தாங்காமல் அய்யோ, அம்மோ என்று அலறி துடித்தனர்.
இது குறித்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 108ஆம்புலன்ஸ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்சுகள் பாலப்பம்பட்டிக்கு வந்து மலைத்தேனீக்கள் கொட்டியவர்களை உடுமலை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவ மனையில், மலைத்தேனீக்கள் கொட்டியவர்களுக்கு ஊசி போடப்பட்டு, தேனீக்கள் கொட்டிய  இடத்தில் மருந்து தடவப்பட்டது. பக்தர்களை ஆம்புலன்சில் அழைத்து வந்தபோது ஆம்புலன்சில் மலைத்தேனீக்களும் வந்து விட்டன. ஆம்புலன்சில் இருந்து பக்தர்கள் இறங்கிய போது ஆம்புலன்சில் இருந்து பறந்து வந்த மலைத்தேனீக்கள் மற்றவர்களையும் கொட்டியது.
150 பக்தர்கள்
மலைத்தேனீக்கள் கொட்டியதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடுமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தவிர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பாலப்பம்பட்டிக்கு சென்று, மலைத்தேனீக்கள் கொட்டிய சிலருக்கு ஊசி போட்டு சிகிச்சையளித்தனர். மலைத்தேனீக்கள் பக்தர்களை ஓட, ஓட விரட்டி கொட்டியதால் கோவில் பகுதி வெறிச்சோடியது. நீண்ட நேரத்திற்கு பிறகு தேனீக்கள் சுற்றுவது குறைந்தது.
மலைத்தேனீக்கள் சுற்றுவது குறைந்ததும் ராஜகாளியம்மன் திருக்கல்யாணம் வைபவம் கோவிலுக்குள் நடந்தது.கோவிலுக்குள் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.
தேனீக்கள் வந்தது எப்படி?
கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது யாக குண்டத்தில் வேள்வி நடந்தது. இந்த யாக குண்டத்தில் இருந்து வெளியேறிய புகை, மலைத்தேனீக்கள் இருந்த கூடு பகுதிக்கு சென்றதால், மலைத்தேனீக்கள் அங்கிருந்து பறந்து வந்து பக்தர்களை கொட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.கோவில் திருவிழாவின் போது மலைத்தேனீக்கள் பக்தர்களை ஓட, ஓடவிரட்டி கொட்டியது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story