வெள்ளியணை பழைய காவலர் குடியிருப்பில் விபத்து


வெள்ளியணை பழைய காவலர் குடியிருப்பில் விபத்து
x
தினத்தந்தி 11 March 2021 12:01 AM IST (Updated: 11 March 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளியணை பழைய காவலர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் வழக்கு சம்பந்தமாக அடுக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.

வெள்ளியணை
காவலர் குடியிருப்பு கட்டிடம்
கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் தங்குவதற்காக அதே பகுதியில் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்ட 1951 ஆண்டு காலகட்டத்தில் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு போலீசார் பலர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தனர். 
குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தொடர்ந்து சரியான பராமரிப்பு இல்லாததாலும், இந்த கட்டிடம் குடியிருப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கியிருந்த போலீசார் குடியிருப்புகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். 
பஞ்சு மூட்டைகளில் தீ
இதனால் காலியாக இருந்த குடியிருப்புகளை குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க போலீசார் பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் இங்கு உள்ள 3 எண் குடியிருப்பில் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தின் 2007-ம் ஆண்டு குற்ற வழக்கில் தொடர்புடைய 18 பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடியிருப்பில் இருந்து புகை வருவதை கண்ட போலீசார் அங்கு சென்று பார்த்த போது பஞ்சு மூட்டைகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
இதனையடுத்து போலீசார் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த பஞ்சு மூட்டைகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 
பின்னர் குடியிருப்பு உள்ளே சென்று பார்த்தபோது பஞ்சு மூட்டைகள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story