நெல்லை அருகே மர்மமாக இறந்த டிரைவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு


நெல்லை அருகே மர்மமாக இறந்த டிரைவர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு
x
தினத்தந்தி 11 March 2021 12:32 AM IST (Updated: 11 March 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மர்மமான முறையில் இறந்த லாரி டிரைவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே மர்மமான முறையில் இறந்த லாரி டிரைவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

லாரி டிரைவர் சாவு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார்குளத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் துளசிமணி (வயது 30). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை அருகே தனது மனைவி ஊரில் வைத்து இறந்து விட்டார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். துளசிமணி உடலை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்கு பிரேத பரிசோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் துளசிமணியின் உடலை வாங்க மறுத்து தாய் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் துளசிமணி தாய் சித்ரா மற்றும் உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் துளசிமணி சாவில் மர்மம் இருப்பதாக கூறி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் துளசிமணியின் தாய் சித்ரா கூறி இருப்பதாவது:-
நான் 16 மாதங்களாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எனது தம்பி பூமிநாதன் என்னை தொடர்பு கொண்டு உனது மகன் துளசிமணி இறந்துவிட்டான் என்று தகவல் தெரிவித்தான்.

இதை கேட்டு பதறிய நான் எனது மருமகளுக்கு போனில் விவரம் கேட்டேன். அதற்கு அவள் உங்கள் மகன் மஞ்சள்காமாலை நோயால் இறந்துவிட்டார் என்று கூறினார். 

உடனே நானும் எனது நிறுவனத்தில் விடுமுறை வாங்கிக் கொண்டு எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இங்கு வந்து விசாரித்த போது, எனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே எனது மகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இதில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்று நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு வழங்கினர்.

Next Story