பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணிக்கம் தாகூர் எம்.பி.


பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்                          மாணிக்கம் தாகூர் எம்.பி.
x
தினத்தந்தி 11 March 2021 12:52 AM IST (Updated: 11 March 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர்,மார்ச்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர் பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் விதிமீறல் தொடர்பாக சோதனையில் ஈடுபடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து 41 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைகள் அச்சுறுத்தும் நிலையில் இருந்ததால் பட்டாசு ஆலைகளை மூட ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் பட்டாசு தொழில் பாதிக்கப்படுவதுடன், இதனையே நம்பி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் முழுவதும் பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு வேதனை தருவது தவிர்க்கப்பட வேண்டும். வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும்போது மட்டும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறலை கண்டறிய சோதனை நடத்துகின்றனர். விதிமுறை மீறல் இருந்தால் உடனடியாக பட்டாசு ஆலை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்கின்றனர். பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைத்து விடுகின்றனர். இந்த நடைமுறையை பின்பற்றுவது என்பது தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்.
ஏற்புடையது அல்ல...
விதிமுறைகளை பின்பற்றுவது என்பது அவசியமும், அத்தியாவசியமும் என்றாலும் சோதனை நடத்தும் அதிகாரிகள் விதிமீறல்களை கண்டறிந்தால் அதனை சரிசெய்ய அந்த பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதற்கு பின்பும் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சோதனை நடத்திய உடனேயே விதிமுறை மீறல் இருப்பதாக கூறி பட்டாசு ஆலைகளை சீல் வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.
கோரிக்கை
எனவே பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்களை கண்டறிந்தால் அவற்றை சீர்படுத்துவதற்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அதன் பின்பே துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். 
மத்திய மாநில அரசுகள், ஒரு மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் தந்து வரும் தொழிலை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். தொழிலையும், அதன் மூலம் வாழ்வாதாரம் பெறும் தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அதை விடுத்து தடாலடியாக தொழிலையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் அளவில் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story