அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி சாலை மறியல்
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளரை மாற்றக்கோரி கள்ளக்குறிச்சியில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவுள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சியினர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் செந்தில்குமார் என்பவரை அ.தி.மு.க.அறிவி்த்தது. இதற்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி கட்சி அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நான்குமுனை சந்திப்புக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நகர பொருளாளர் சுரேஷ்குமார் தலைமையில் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அவர்கள், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றிவிட்டு அதற்கு பதில் முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து கட்சியினர் அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தில் வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், ஜெயக்குமார், அன்வர், ஜெயசீலன், வேணுகோபால், சங்கர், ஞானபிரகாஷ், அர்ஜுனன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் குட்டி, பேரவை செயலாளர்கள் சிவசங்கர், அருண்குமார், வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story