“வாருங்கள்... வாக்களிப்போம்...” திருமண அழைப்பிதழ் வடிவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பதாகை


“வாருங்கள்... வாக்களிப்போம்...” திருமண அழைப்பிதழ் வடிவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பதாகை
x
தினத்தந்தி 11 March 2021 3:05 AM IST (Updated: 11 March 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

“வாருங்கள்... வாக்களிப்போம்...” என்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் திருமண அழைப்பிதழ் வடிவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பதாகை வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
“வாருங்கள்... வாக்களிப்போம்...” என்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் திருமண அழைப்பிதழ் வடிவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பதாகை வைக்கப்பட்டுள்ளது. 
அழைப்பிதழ்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக அரசு அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் ஏப்ரல் 6-ந் தேதி அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும், வாக்களிப்பு நமது கடமை, மக்கள் ஆட்சி அமைய வாக்கு அளிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு வாக்காளர்களை எளிதாக கவரும் வகையில் அழைப்பிதழ் வடிவத்தில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் “வாக்களிக்க அழைப்பிதழ்” என்ற தலைப்பில், ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
முகக்கவசம் கட்டாயம் 
அந்த அழைப்பிதழில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அதன்படி “வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனி நபர் இடைவெளியை கடைபிடித்து சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து, தவறாமல் வாக்கை பதிவு செய்யும்படி அன்புடன் அழைக்கின்றோம். வாருங்கள்... வாக்களிப்போம்...”, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் “கட்டாயம் முகக்கவசம் அணிந்து வாருங்கள்” என்று முடிவில் கூறப்பட்டு உள்ளது. இந்த அழைப்பிதழ் வடிவிலான விழிப்புணர்வு பலகையை வாக்காளர்களும் ஆர்வமாக பார்வையிட்டு செல்கிறார்கள்.

Next Story