கள்ளநோட்டு மாற்ற முயன்ற 2 பேர் கைது


கள்ளநோட்டு மாற்ற முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2021 3:08 AM IST (Updated: 11 March 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறை ரெயில்நிலையம் அருகே கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக கள்ளநோட்டுகள், எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

களியக்காவிளை:
குழித்துறை ரெயில்நிலையம் அருகே கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக கள்ளநோட்டுகள், எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல்
குமரி மாவட்டம் குழித்துறை அடுத்த கழுவன்திட்டையில் குழித்துறை ரெயில்நிலையம் அருகே 2 நபர்கள் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து கடைகளில் மாற்ற முயன்றனர். 
இதை கண்ட கடைக்காரர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இதுபற்றி அவர்கள் களியக்காவிளை போலீசாருக்கு ரகசியமாக தெரிவித்தனர்.
கள்ளநோட்டுகள்
தகவல் அறிந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அந்த நபர்களை கண்காணித்தனர். அவர்கள் கைகளில் 500 ரூபாய் நோட்டுகளுடன் சுற்றிதிரிவதை கண்ட போலீசார் 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும், அந்த நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. 
பின்னர், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் பாறசாலை அருகே செரியகொல்லா பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 64), குமார்(74) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 160 எண்ணம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர். 
வாக்காளர்களுக்கு   வினியோகமா?
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பாறசாலை  செரியகொல்லா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளநோட்டு அச்சிடும் எந்திரம், நோட்டு அச்சடிக்க பயன்படுத்தும் காகிதம், மை உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், அவர்கள் எங்கெல்லாம் பணத்தை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்பதும் பற்றியும், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கள்ளநோட்டுகளை வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டதா? என பல்ேவறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனிப்படை அமைப்பு
இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கேரள மாநிலம் தப்பிச் சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படையினர் கள்ளநோட்டு கும்பலை பிடிக்க கேரள மாநிலம் விரைந்துள்ளனர்.
கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற 2பேர் கைது செய்யப்பட்டதும், எந்திரம் கட்டு கட்டாக நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story