100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
ஈரோடு
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு கோலம்
வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடத்தப்படுவதற்கு வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஈரோட்டில் கோலப்போட்டி, கும்மி அடித்தல், கையெழுத்து இயக்கம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். அந்த கோலத்தில் தேர்தல் தேதி, வாக்களிப்பது நமது உரிமை, நேர்மையாக வாக்களிக்க வேண்டும், வாக்காளர்கள் உதவி எண் 1950, கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கோலத்தில் இடம்பெற்றன. இந்த கோலங்களை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
கும்மி பாட்டு
வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட கலெக்டர் கதிரவன் உறுதிமொழியை வாசிக்க, அவரை தொடர்ந்து அதிகாரிகள் உறுதி மொழியை ஏற்றனர். தொடர்ந்து கும்மி பாட்டு பாடி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பெண்கள் சுற்றிலும் நின்றபடி ‘வாக்களிப்போம்... வாக்களிப்போம்...’ என்ற தலைப்பில் கும்மி அடித்து பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஊடக மையத்தையும் கலெக்டர் கதிரவன் திறந்து வைத்து பார்வையிட்டார். இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story