ஹிரன் மன்சுக் கொலை வழக்கு விவகாரம் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து நீக்கம் மேல்-சபையில் உள்துறை மந்திரி அறிவிப்பு
ஹிரன் மன்சுக் கொலை வழக்கு விசாரணை முடியும் வரை போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவை குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து நீக்குவதாக மேல்-சபையில் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அறிவித்தார்.
மும்பை,
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியில் அன்டிலா வீட்டின் அருகில் கடந்த மாதம் 18-ந் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
விசாரணையில், அந்த கார் தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரை மர்ம நபர்கள் திருடி அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் நிறுத்தி சென்றதாக போலீசார் கூறினர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிரன் மன்சுக் தானே கழிமுகப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஹிரன் மன்சுக் மனைவி அளித்த வாக்குமூலத்தில் கொலை வழக்கில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சிகள் போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரை கைது செய்யவேண்டும் என தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர். அது நேற்று மேல்-சபையிலும் எதிரொலித்தது.
இதற்கு மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், “ஹிரன் மன்சுக் கொலை குறித்த வழக்கு விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து நீக்கப்படுவார். எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிகரித்துவரும் கோரிக்கையை கருத்தில் கொண்டு நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.
ஹரன் மன்சுக் கொலையில் போலீஸ் அதிகாரி சச்சின் வாசேவுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
Related Tags :
Next Story