கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3.10 லட்சம், 9 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.3.10 லட்சம், 9 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.3.10 லட்சம் ரொக்கமும், 9 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.3.10 லட்சம் ரொக்கமும், 9 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஜக்கேரி மேடு பகுதியில் கெலமங்கலம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி ஸ்கூட்டரை சோதனை செய்தனர். அப்போது ஸ்கூட்டரில் 9 கிலோ 139 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் இருந்தது. இதற்கு எந்த ஆவணங்களும் இல்லை.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஓசூர் மத்திகிரி டைட்டான் டவுன்சிப்பை சேர்ந்த ரமேஷ் (30), சேசுராம் (35) என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த ெவள்ளி பொருட்களை  தளி தொகுதி பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த  ெவள்ளி பொருட்களை தேன்கனிக்கோட்டை தாசில்தார் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடாசலம் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வந்த காரை சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2.50 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு பழைய இரும்பு வாங்க பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் வேப்பனப்பள்ளி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story