வேளச்சேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி 2 பேர் கைது
வேளச்சேரியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் நேற்று அதிகாலையில், 2 வடமாநில வாலிபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை கண்டதும் இருவரும் தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார், மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், துரைப்பாக்கம் அருகே உள்ள காரப்பாக்கத்தில் வசிக்கும் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ரேம்ளல்ங்கா (வயது 28), ஜானி லால்ரூடிகிமா (28) என தெரியவந்தது.
இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தனர். ஆனால் சரியான வேலை கிடைக்காததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர்.
2 பேரையும் வேளச்சேரி போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story