மத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய உதவி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது


மத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய  உதவி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2021 12:50 PM IST (Updated: 11 March 2021 12:50 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய உதவி பேராசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்:
மத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய உதவி பேராசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதே போல், மத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. 
இது தொடர்பான புகார்களின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க, ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி மேற்பார்வையில், மத்தூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
உதவி பேராசிரியர் கைது
தனிப்படை போலீசார், சம்பவம் நடந்்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. விசாரணையில், அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்த தணிகாச்சலம் (வயது 35), வெங்கடேசன் (30) ஆகியோர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. 
தணிகாச்சலம், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வெங்கடேசன், அனுமன்தீர்த்தம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.

Next Story