முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம்


முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 11 March 2021 12:54 PM IST (Updated: 11 March 2021 12:55 PM IST)
t-max-icont-min-icon

முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கோவை,

கோவை மாநகரில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் ஊரக பகுதிகளை விட மாநகராட்சி பகுதியில்தான் கொரோனா தொற்று அதிகம் காணப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள்தான்.

 எனவே இந்த புள்ளிவிவரத்தை அடிப்படையாக கொண்டு கோவை மாநகராட்சியில் தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள கடைக்காரர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

ஆர்.ஜி.வீதி, மருதமலை ரோடு, பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் கடைக்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

 இதனை மீறுபவர்களுக்கு தலா ரூ.200 அபராதமாக விதிக்கப்படுகிறது. இதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று முன்தினம் மட்டும் ரூ.45 ஆயிரமும், நேற்று ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 100-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story