கோவை தெற்கு தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க கூடாது என்று அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டம்
கோவை தெற்கு தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க கூடாது என்று அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூண்டோடு ராஜினாமா செய்ய போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. வசம் உள்ள கோவை தெற்கு சட்டசபை தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்கி உள்ளது.
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியை மீண்டும் தற்போதைய எம்.எல்.ஏ.வான அம்மன் அர்ச்சுனனுக்கே ஒதுக்க வேண்டும் எனவும், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க கூடாது என்று கோரியும் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கட்சி அலுவலகமான இதய தெய்வம் மாளிகை முன்பு நேற்று காலை திரண்டனர்.
பின்னர் அவர்கள் கோவை தெற்கு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்ற கோஷத்தை எழுப்பி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தெற்கு தொகுதிக்குட்பட்ட 25-வது வார்டு செயலாளர்கள், 5 டிவிஷன் செயலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் ராஜினாமா கடிதங்களை வைத்திருந்தனர்.
அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் தனது சட்டையை கழற்றி தரையில் உருண்ட படி "வேண்டும்.. வேண்டும் அ.தி.மு.க. வுக்கு தெற்கு தொகுதி வேண்டும்" என்று கோஷமிட்டனர்.
போராட்டம் நடத்திய வார்டு செயலாளர்கள் கூறும்போது " அம்மன் அர்ச்சுனன் இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டப் பணிகளை செய்து கொடுத்துள்ளார். அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தவர். இந்த தொகுதியை அவருக்கே மீண்டும் ஒதுக்க வேண்டும்.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது எங்களுக்கு உள்ளக்குமுறலை ஏற்படுத்துகிறது. ஆகவே தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க கூடாது. மீண்டும் அம்மன் அர்ச்சுனனுக்கே தொகுதியை ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வோம்" என்று தெரிவித்தனர்.
கோவையில் கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story