பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் பணியை உடனே தொடங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - ஆதிவாசி கிராம மக்கள் அறிவிப்பு
பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் பணியை உடனே தொடங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆதிவாசி கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.
பந்தலூர்
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே வெள்ளச்சால் உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீடுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து வீடுகளை சீரமைத்து கொடுக்க கூடலூர் ஒன்றிய அதிகாரிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் ஒன்றிய அதிகாரிகள் வீடுகளை சீரமைக்க சிலருக்கு ஒப்பந்தம் வழங்கினர். தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.
வீடுகளின் சில பகுதிகளை இடித்தனர். மேலும் கட்டுமான பொருட்களும் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஏதோ சில காரணங்களால் பணி நிறுத்தப்பட்டது. இதனால் குடிசை அமைத்து ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அவர்கள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே வீடுகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும், இல்லையென்றால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று அறிவித்து உள்ளனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி வைத்து இருக்கின்றனர்.
Related Tags :
Next Story