பந்தலூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா


பந்தலூர் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
x
தினத்தந்தி 11 March 2021 8:51 PM IST (Updated: 11 March 2021 8:54 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, பந்தலூரில் உள்ளசிவன் கோவில் களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.

ஊட்டி,

ஊட்டி அருகே காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. காசி விஸ்வநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னரும், கட்டாயம் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோன்று பந்தலூர் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 5 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

9-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தன்வந்திரி ஹோமம், இரவு 7 மணிக்கு பஜனை, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு ஆதிவாசி மக்களின் கோலாட்டம், இரவு 7 மணிக்கு கோபால மந்திரார்ச்சனை நடைபெற்றது.

பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு சிவன்-பார்வதி பூஜை, விளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு விஷ்ணு கோவிலில் இருந்து சாமி ஊர்வலம் புறப்பட்டு சிவன் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று நீலகிரியில் உள்ள பிற சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

Next Story