நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில், முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தது. தினமும் 5-க்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இடையே முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு நடைமுறை மூலம் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இ-பதிவு எடுக்காதவர்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நீலகிரியில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை கண்காணிக்க நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் தலா 20 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் ஒருங்கிணைந்து முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணியாமல் தொற்று பரவுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 6 மாதம் சிறை தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசு பஸ்களில் முகக்கவசம் அணியாத பயணிகளை அனுமதிக்கக்கூடாது.
இது தவிர முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களில் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அதிகமாக கூட வாய்ப்பு உள்ளது. எனவே அலட்சியமாக இல்லாமல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story