தூத்துக்குடி வந்த அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி தொகுதி), எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. (ஸ்ரீவைகுண்டம்), சின்னப்பன் எம்.எல்.ஏ. (விளாத்திகுளம்), மோகன் (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகத்தான வெற்றி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே வேட்பாளர் பட்டியலை முதன் முதலாக வெளியிட்டது அ.தி.மு.க.தான். முதல் பட்டியலில் 6 பேர் பெயர் வெளியிடப்பட்டது. 2-வது பட்டியலில் 171 பேர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தூத்துக்குடிக்கு வந்து உள்ளோம். கட்சி தொண்டர்களின் எழுச்சியை பார்க்கும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.
அந்த வெற்றியை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்ப்பிப்போம். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உறுதி செய்வதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் வகிக்கும்.
கூடுதல் பலம்
கட்சி தலைமை அறிவிக்கும் நாளில் நாங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வோம். மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆட்சியை அ.தி.மு.க. நடத்தி வருகிறது. மீண்டும் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அ.தி.மு.க. 200-க்கும் அதிகமான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி சாதனையாக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
தூத்துக்குடி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தூத்துக்குடி மட்டுமல்ல, இன்னும் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த தொகுதிகள் தொடர்பாக அ.தி.மு.க. தலைமை முடிவு செய்யும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளிவரும் போது, மக்கள் விரும்பும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் அறிக்கை அ.தி.மு.க.வின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில்பட்டியில்...
இதைத்தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு கயத்தாறு, கோவில்பட்டியிலும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் ேகாவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜர், டாக்டர் அம்பேத்கர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வீரன் சுந்தரலிங்கம், தியாகி இமானுவேல் சேகரன், வ.உ.சி. சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.
Related Tags :
Next Story