தோகைமலை அருகே மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு


தோகைமலை அருகே மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 March 2021 6:27 PM GMT (Updated: 11 March 2021 6:27 PM GMT)

தோகைமலை அருகே பாதை பிரச்சினையில் இறந்த மூதாட்டியின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை
மூதாட்டி சாவு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 60). இந்தநிலையில் செல்வராஜ் இறந்து விட்ட காரணத்தால் பஞ்சவர்ணம் கூலி வேலைக்கு சென்று வந்து மகள் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பஞ்சவர்ணம் இறந்தார். 
இந்தநிலையில் பஞ்சவர்ணத்தின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்லும் பாதை 2 அடி மட்டுமே இருந்துள்ளது.  இதனால் வீட்டின் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளனர். ஆனால் இந்த பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்து கொண்டு, பஞ்சவர்ணத்தின் உடலை இந்த பாதை வழியாக எடுத்து செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். 
உறவினர்கள் மறியல் 
இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தோகைமலை- திருச்சி மெயின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சசிதரன், வருவாய் அதிகாரி புவனேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி தேன்மொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பஞ்சவர்ணத்தின் உடலை எடுத்து செல்வதற்கு தற்காலிமாக 10 அடி அகலத்தில் பாதை அமைத்து கொடுக்கப்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு
மேலும் தேர்தல் நடத்த விதிமுறை அமலில் உள்ளதால், வருவாய் அதிகாரி மூலம் நீதிமன்றத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி தகவல் தெரிவிக்கப்படும். இல்லையென்றால் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை போடப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்தார். 
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மூதாட்டியின் உடல் 10 அடி பாதை வழியாக எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.


Next Story