அய்யர்மலை பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அய்யர்மலை பொக்லைன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குளித்தலை
வேலை நிறுத்தம்
கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் அய்யர்மலையை சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் பொக்லைன் (ஜே.சி.பி.) எந்திரம் வைத்துள்ளனர். அதை வாடகைக்கு விட்டு வருகின்றனர். தற்போது உயர்ந்துள்ள டீசல் விலை உயர்வு மற்றும் பொக்லைன் எந்திர உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே பெற்று வந்த வாடகை போதுமானதாக இல்லாத காரணத்தால் வாடகையை உயர்த்துவதை வெளிப்படுத்தும் பொருட்டு நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதையொட்டி குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் தங்களது பொக்லைன் எந்திரத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அதன் அருகே தற்காலிக பந்தல் அமைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பொக்லைன் உரிமையாளர்கள், டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளபோது இது போன்று ஒரே இடத்தில் பலர் ஒன்று கூடக்கூடாது எனவே அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார்.
அதை ஏற்று தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story