நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது: 6 தொகுதிகளில் வேட்புமனு தாக்கலுக்கு கடும் கட்டுப்பாடு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 6 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல்,
தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 19-ந் தேதி வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இவற்றில் நாமக்கல், திருச்செங்கோடு தொகுதிகளுக்கு அந்தந்த உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம் மற்றும் பரமத்திவேலூர் தொகுதிகளுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார் அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கேயே முகாமிட்டு வேட்புமனுக்களை பெற உள்ளனர்.
இதனிடையே வேட்புமனு தாக்கலையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் மற்றும் அவருடன் வரும் 2 பேரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேட்புமனு தாக்கலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தில் சாலையில் இருபுறமும் 100 மீட்டர் இடைவெளிக்கான எல்லைகோடு வரையும் பணி நடைபெற்றது. இந்த கோட்டிற்குள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டபடி ஒரு வேட்பாளருடன் 2 வாகனங்கள் மட்டுமே நுழைய முடியும். இந்த பணிகளை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story