விளையாட்டு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்


விளையாட்டு வீரர்கள் சைக்கிளில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அவர்களுக்கு முக கவசம் வழங்காததால் ஊர்வலம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பெரம்பலூர்:

தொடங்கி வைக்காத கலெக்டர்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் சார்பில் சைக்கிள் ஊர்வலம் நேற்று மாலை பெரம்பலூரில் நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த ஊர்வலம் தாமதமாக மாலை 5.15 மணிக்கு தொடங்க இருந்தது.
முன்னதாகவே மாலை 3.30 மணிக்கே போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். மாலை 5.15 மணிக்கு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்க வந்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கட பிரியா, சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்க வந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் யாரும் முக கவசம் அணியாததால், ஊர்வலத்தை தொடங்கி வைக்க முடியாது என்று கூறிவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று விட்டார்.
ஊர்வலம்
பின்னர் அலுவலர்களால் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட முக கவசங்கள் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்க வந்த வீரர்-வீராங்கனைகள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டனர். அதை உறுதி செய்த பிறகே மாலை 5.35 மணியளவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மீண்டும் வந்து சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் கட்டிக்கொண்டும், கோஷங்களை எழுப்பியவாறும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் பாலக்கரை ரவுண்டானா, வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

Next Story