உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.33 லட்சம் பறிமுதல்
பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
தீவிர வாகன சோதனை
சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினரும், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர்- துறையூர் சாலையில் செட்டிகுளம்- செஞ்சேரி பிரிவு சாலை அருகே வேப்பந்தட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமையில் போலீசார் அடங்கிய தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 110 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், சரக்கு வாகனத்தில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் எசனை சேர்ந்த தேவதாஸ் மகன் கிஷோர்ராஜ் (வயது 25) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் சார் கருவூலககத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கார்-மோட்டார் சைக்கிள்
இதேபோல் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மேலமாத்தூர் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சட்டநாதன் தலைமையில் போலீசார் அடங்கிய தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக காரில் வந்த பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (40) என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, குன்னம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வட்டார வழங்கல் அலுவலர் திலகவதி தலைமையில் போலீசார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை கட்டையன்குடிகாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமாரை(25) சோதனை செய்தனர். அப்போது அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.70 ஆயிரத்து 530 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு குன்னம் சார் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுவரை ரூ.14 லட்சத்து 16 ஆயிரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் மூலம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 16 புகார்கள் பெறப்பட்டுள்ளன. குன்னம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 5 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து புகார்களுக்கும் உரிய முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்களின் மூலமாக உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு சென்ற நபர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் இதுவரைக்கும் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 12 பேரிடம் மொத்தம் ரூ.14 லட்சத்து 46 ஆயிரத்து 807 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தகுந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் 3 பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 67 ரொக்கம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story