அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படாததை கண்டித்து கட்சியினர் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் ெதாகுதி அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதனால் அந்த தொகுதி தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். அத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் அந்த தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் ஜெயங்கொண்டம் ெதாகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொகுதி அ.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து அக்கட்சியினர் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பேரூர் நகர செயலாளர் சையத் மக்தூம் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து பாதிப்பு
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டு, சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம், என்று கூறினர்.
இதையடுத்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது பற்றி தகவல் அறிந்த ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மறியலில் ஈடுபட்டவர்களை போனில் தொடர்பு கொண்டு, தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எனவே மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு, கூறியுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story