அரியலூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க பரிசீலிக்க கோரி தொண்டர் தீக்குளிக்க முயற்சி
அரியலூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க பரிசீலிக்க கோரி தொண்டர் தீக்குளிக்க முயன்றார்.
அரியலூர்:
தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அரியலூர் தொகுதியும் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் நேற்று அண்ணா சிலை அருகே உள்ள நகர தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டர் செல்லக்கண்ணு(வயது 28), தொண்டர்களே இல்லாத கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை மறுபரிசீலனை செய்து தி.மு.க.வுக்கு அரியலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் கையில் வைத்திருந்த ஒரு பாட்டிலுடன் பஸ் நிலையம் நோக்கி ஓடினார். அங்கு நுழைவுவாயிலில் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி, அரியலூர் தொகுதியை தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும் என்று கூறிக்கொண்டே தீ வைக்க முயன்றார். அப்போது பின்னால் ஓடிவந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அரியலூர் போலீசார் அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story