தோப்புவெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் மறுப்பு பெருந்துறையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


தோப்புவெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு சீட் மறுப்பு பெருந்துறையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 March 2021 3:00 AM IST (Updated: 12 March 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் பெருந்துறையில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை
தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வுக்கு தேர்தலில் போட்டியிட சீட்  கொடுக்காததால் பெருந்துறையில் அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
வேட்பாளர் பட்டியல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தங்களுடைய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறார்கள். இதில் ஏற்கனவே அ.தி.மு.க. தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது. 
இந்தநிலையில் அந்த கட்சி நேற்று முன்தினம் 2-வது கட்டமாக 171 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 
அதிருப்தி
இந்த பட்டியலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஒன்றிய கவுன்சிலரான ஜே.கே. என்கிற எஸ்.ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். 
முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாசலத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்கப்படவில்லை. இது தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பெருந்துறை பவானி ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு, தோப்பு வெங்கடாசலத்தின் ஆதரவாளர்களான அ.தி.மு.க பேச்சாளர் டி.டி.ஜெகதீஸ், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் கே.எம்.பழனிசாமி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க துணைச்செயலாளர் அருணாச்சலம், முன்னாள் ஊராட்சித்தலைவர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் சரஸ்வதி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பெட்டிசன் மணி உள்பட ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினரை அப்புறப்படுத்தினர். இதனால் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிக்கோவில் ரோட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ரோட்டின் குறுக்கே நின்று கொண்டு பெருந்துறை தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும். தோப்பு வெங்கடாசலத்தை அ.தி.மு.க. வேட்பாளராக மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று  கோஷமிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து கட்சியினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story