தந்தையை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பலி
மின்சாரம் பாய்ந்த தந்தையை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பலியானார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம்,
மின்சாரம் பாய்ந்த தந்தையை காப்பாற்றிய எலக்ட்ரீசியன் மின்சாரம் பாய்ந்து பலியானார். அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்யாததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
எலக்ட்ரீசியன்
திருச்சி சமயபுரம் கூத்தூர் குடித்தெருவை சேர்ந்தவர் முஸ்தபா. இவரது மகன் சபியுல்லா (வயது 24). எலக்ட்ரீசியனான இவருக்கு பெற்றோா் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனா்.
இந்தநிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை பார்ப்பதற்காக நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) சபியுல்லாவின் வீட்டிற்கு வர இருந்தனர். இதற்காக நேற்று காலை சபியுல்லாவும், அவரது தந்தை முஸ்தபாவும் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது எதிர்பாராதவிதமாக முஸ்தபா மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சபியுல்லா, தந்தையை கீழே தள்ளிவிட்டு காப்பாற்றினார். அப்போது சபியுல்லா மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மாலை 4.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதால், நாளை(இன்று) காலை பிரேத பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் உடனே பிரேதபரிசோதனை செய்ய வலியுறுத்தி மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சபியுல்லா உடல் மாலை 6.45 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story