கோபி அருகே தொழிலாளி அடித்துக்கொலை; 2 பேர் கைது


கோபி அருகே தொழிலாளி அடித்துக்கொலை; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2021 3:53 AM IST (Updated: 12 March 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடத்தூர்
கோபி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
கோபி அருகே உள்ள பெரியமொடச்சூர் சங்கரன் வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் திருப்பூரில் தறி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 
கடந்த 7-ந் தேதி பெரியமொடச்சூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழா நடத்துவது குறித்த ஊர் கூட்டம் நடைபெற்றது. 
தாக்குதல்
இதில் கலந்து கொள்வதற்காக சங்கர் வந்திருந்தார்.  அப்போது அதே ஊரை சேர்ந்த கூலிதொழிலாளர்களான முருகன் (42), மோகன்ராஜ் (46) ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவில் வரி கட்டுவது குறித்து சங்கரிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரவர் தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். 
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு சங்கர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், மோகன்ராஜ் ஆகியோர் சங்கரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். தகராறு முற்றியதும் முருகன், மோகன்ராஜ் ஆகியோர் ஆத்திரம் அடைந்து சங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சங்கர் காயம் அடைந்து மயங்கி விழுந்தார். 
சாவு
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்  சங்கர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகன் மற்றும் மோகன்ராஜை கைது செய்தனர்.

Next Story