வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு


வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 12 March 2021 11:13 AM IST (Updated: 12 March 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,049 வாக்குச்சாடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்-1, வாக்குச்சாவடி அலுவலர்-2, வாக்குச்சாவடி அலுவலர்-3 என தலா 4 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தமாக இந்த பணியில் 9,836 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்கள் எந்த வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளார்கள் என்பதை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மெகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்காக சம்பந்தப்பட்ட பணியாளரின் விவரங்கள், அவரின் சொந்த ஊர் உள்ள சட்டமன்ற தொகுதி, அவர் தற்போது பணிபுரிந்து வரும் அலுவலகம் உள்ள சட்டமன்ற தொகுதி ஆகிய விவரங்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டு, கணினி மூலம் தேர்வு செய்யப்பட்டது.

இவர்களுக்கான பணியாணை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது. வாக்குச்சாவடி பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இவர்களுக்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு வேதலோக வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியிலும், நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கான பயிற்சி வகுப்பு ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியிலும் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பிரிவு தாசில்தார் திருமுருகன், தேர்தல் பிரிவு கணினி பொறியாளர் சக்திவேல் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story