தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோருக்கு, பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டுகோள்


தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்றோருக்கு, பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 March 2021 7:04 PM IST (Updated: 12 March 2021 7:04 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் மூலம் தங்கள் பெற்றோருக்கு தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் கடிதம் மூலம் தங்கள் பெற்றோருக்கு தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளனர்.
விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மேற்கொள்வதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவ-மாணவிகள் 1 லட்சம் பேர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும். பரிசு பொருட்கள் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தபால் கார்டு எழுதி உள்ளனர். இந்த தபால் கார்டை, தபால்துறை மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் வீடுகளில் வழங்கப்பட உள்ளது.
இதற்காக பள்ளிக்கூடங்களில் சேகரிக்கப்பட்ட தபால் கார்டுகளை தபால்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமை தாங்கி, தபால் கார்டுகளை தபால்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
1 லட்சம் தபால் கார்டு
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும், எந்தவித பணமோ, பரிசுப்பொருட்கள் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக புது முயற்சியாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 9, 10, 11, 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட 1 லட்சம் போஸ்ட் கார்டுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த போஸ்ட் கார்டுகள் அந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி, மாமா, அத்தை மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக 1 லட்சம் போஸ்ட் கார்டுகள் நமது மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தில் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தபால் கார்டுகளை ஒரு வார காலத்திற்குள் வினியோகிக்கும் பணிகள் முடிக்கப்படும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 முதல் 6 லட்சம் வாக்காளர்கள் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் (பயிற்சி) சதீஸ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், உதவி தபால் கண்காணிப்பாளர் குமரன், தூத்துக்குடி கோட்ட அஞ்சலக மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story