லாரி மோதி புழல் சிறை காவலர் பலி - மற்றொரு காவலர் படுகாயம்
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புழல் சிறை காவலர் பலியானார். மற்றொரு காவலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்குன்றம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 24). இவர், புழல் சிறை காவலர் குடியிருப்பில் தங்கி, புழல் சிறையில் காவலராக வேலை செய்து வந்தார்.
அதே குடியிருப்பைச் சேர்ந்தவர் மணிமாறன் (24). இவரும், புழல் சிறையில் காவலராக உள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மாதவரத்தில் இருந்து புழல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
புழல் சைக்கிள் ஷாப் ஜி.என்.டி. சாலையில் வந்தபோது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சிறை காவலர் கோபாலகிருஷ்ணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த மற்றொரு காவலரான மணிமாறன், சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலமேலு வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story