விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை


விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 12 March 2021 10:08 PM IST (Updated: 12 March 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் நாளில் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

விழுப்புரம், 

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 2,368 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதுபோல் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வேட்பு மனுத்தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றும், வேட்பாளர் வாகனத்துடன் சேர்த்து மொத்தம் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், மற்றவர்கள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.


கட்டுப்பாடுகள்

இந்த கட்டுப்பாடுகளின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலும் 2 நாட்களுக்கு முன்னதாகவே முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான கோட்டாட்சியர் அலுவலகம், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகம், வானூர் தாலுகா அலுவலகம், செஞ்சி தாலுகா அலுவலகம், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளே யாரும் செல்லாத அளவுக்கு அலுவலகங்களுக்கு வரக்கூடிய சாலைகளில் அடையாள குறியீடுகள் வரையப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. 

அதேபோல் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மனு அளிப்பதை தடுக்கும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


7 தொகுதிகள்

இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாது. எனவே வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் நாளில் அரசியல் கட்சியினரோ, சுயேட்சை வேட்பாளர்களோ மனுத்தாக்கல் செய்ய வரலாம் என்று கருதி அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பு மனுக்களை பெற தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் வேட்பு மனுத்தாக்கலின் முதல் நாளான நேற்று, மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

Next Story