சூலூர் தொகுதியில் சில்லரை நாணய பொட்டலங்களுடன் ஒருவர் வேட்பு மனு தாக்கல்


சூலூர் தொகுதியில் சில்லரை நாணய பொட்டலங்களுடன் ஒருவர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 March 2021 10:46 PM IST (Updated: 12 March 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

சில்லரை நாணயங்களை பொட்டலங்களாக கட்டி கொண்டு வந்து சூலூர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக ளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக 10 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது அலுவலகத்தில் தயார் நிலையில் இருந்தனர். கொரோனா  காரணமாக இந்த முறை வேட்பு மனு தாக்கல் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 

வேட்பாளர்கள் உடன் 2 வாகனங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதை தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

வேட்பாளர்களுடன் வந்தவர்கள் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த தேர்தலில் வேட்பாளரு டன் 4 பேர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பாள ருக்கு உதவி செய்யும் வகையில் 2 பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

அவர்கள் கட்சியினர் மற்றும் சுயேட்சைகளுக்கு வேட்பு மனு தாக்கல் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இதுதவிர வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களின் உடல் வெப்பநிலை தானியங்கி முறையில் கண்டறியும் நவீன கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. 

அதில், எல்.இ.டி. தொலைக்காட்சியில் வேட்பாளர் மற்றும் அவரின் முகம் மற்றும் பதிவான உடல் வெப்பநிலை தெரியும்படி வைக்கப்பட்டு இருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு கிருமிநாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் பொன்.கார்த்திகேயன் என்பவர் போட்டியிட உள்ளார். இவர் வேட் பாளருக்கான வைப்புத்தொகை ரூ.10 ஆயிரம் செலுத்த பொதுமக்க ளிடம் இருந்து நன்கொடையாக பெற்ற சில்லரை நாணயங்களை பொட்டலங்களாக கட்டி சூலூர் தொகுதி தேர்தல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். 

அவர் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு வைப்புத்தொகையை சில்லரை நாணயங்களாக அளித்தார். அதை அதிகாரிகள் 2 முறை எண்ணி சரிபார்த்தனர். அதன்பிறகு அவரது வேட்பு மனுவை அதிகாரி பெற்றுக்கொண்டார். நாணயங்களை பொட்டலமாக கட்டி கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்நாளான நேற்று கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மந்திராச்சலம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இவர் தனது வேட்பு மனுவில் ரூ.1 கோடிக்கு சொத்தும், ரூ.4 லட்சத்திற்கு வாகன கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்பு மனு பெறப்படும். 

கோவை மாவட்டத்தில் நேற்று கோவை வடக்கு, சூலூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story