காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோவில்களில் மயான கொள்ளை தேர்த்திருவிழா அந்தரத்தில் குழந்தைகளை தூக்கி வந்து பக்தர்கள் வழிபாடு
காவேரிப்பட்டணத்தில் அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோவில் களில் மயான கொள்ளை தேர்த்திருவிழா நடந்தது. இதில் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி வந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன், பூங்காவனத்தம்மன் கோவில்களில் மயான கொள்ளை தேர்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை முகவெட்டு எடுத்து ஆற்றங்கரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அலகுகுத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்கள் குத்தியபடி வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் காளி வேடமணிந்து வந்தனர். பிற்பகலில் அம்மன் மயான சூறை ரதம் கோவிலில் இருந்து நகர்வலம் புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பூங்காவனத்தம்மன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது வீதியின் இருபுறமும் திரண்டிருந்த பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி வந்து சாமிக்கு தீபாராதனை காட்டி மலர் தூவி வழிபட்டனர்.
குழந்தைகளை தூக்கி வந்தனர்
மேலும், பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளையும் தூக்கி வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து சாமியின் தேர் தென்பெண்ணை ஆற்று பாலத்தை கடந்து ஆற்றங்கரையை சென்றடைந்தது. இதே போல் அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக நகரில் முக்கிய வீதிகள் வழியாக வந்தது.
தென்பெண்ணை ஆற்று பாலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்்ததால் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story