நாமக்கல் அருகே மின்வாரியத்தில் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
நாமக்கல் அருகே மின்வாரியத்தில் என்ஜினீயர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
பொறியியல் பட்டதாரியான எனது மகன் சிவசங்கர் வேலையில்லாமல் இருந்து வந்தார். மின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் வேலைக்கு விண்ணப்பம் செய்து, அதற்கான தேர்வையும் எழுதி இருந்தார்.
இந்தநிலையில் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு மின்வாரியத்தில் அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் வரை தெரியும். நாங்கள் உங்கள் மகனுக்கு மின்வாரியத்தில் என்ஜினீயர் வேலை வாங்கி தருகிறோம். ரூ.26 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் வேலை கிடைத்து விடும். வேலை கிடைக்காவிட்டால் ரூ.26 லட்சத்தை திரும்ப வட்டியுடன் தருகிறோம் என கூறினர்.
ரூ.26 லட்சம் மோசடி
இதை உண்மை என நம்பிய நான், கடந்த 2018-ம் ஆண்டு ரூ.26 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். சில மாதங்கள் ஆகியும் வேலை உத்தரவு எதுவும் வரவில்லை. எனவே அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தேன். இதையடுத்து அவர்கள் மின்வாரியத்தில் இருந்து வந்ததாக ஒரு நியமன ஆர்டரை கொடுத்தனர். அதில் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் வேலை என குறிப்பிடப்பட்டு இருந்தது. அது ரகசியமாக இருக்கட்டும் என கூறியதால் நான் யாரிடமும் அதை காண்பிக்கவில்லை.
பின்னர் அது போலியான நியமன ஆர்டர் என்பது தெரியவந்தது. இதேபோல் அவர்கள் பலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எனது ரூ.26 லட்சத்தை திரும்ப கேட்டேன். அதற்கு அவர்கள் பல்வேறு தேதிகள் குறிப்பிட்ட காசோலைகளை கொடுத்தனர். அதை வங்கியில் கலெக்சனுக்கு போட்டபோது பணம் இல்லாமல் திரும்ப வந்து விட்டது. எனவே என்னை ஏமாற்றி ரூ.26 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்கள் பணத்தையும் திரும்ப கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.
=========
Related Tags :
Next Story