கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. போட்டி
கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிடுகிறது.
கரூர்
தி.மு.க. வேட்பாளர்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வி.செந்தில்பாலாஜி
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக வி.செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இவரது சொந்த ஊர் கரூர் ராமேஸ்வரப்பட்டி. இவருக்கு 46 வயதாகிறது. 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். பிறகு 2000-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவருக்கு அரவக்குறிச்சி தொகுதியில் சீட் வழங்கப்பட்டது. அப்போது பணபட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் நிறுத்தப்பட்டது. பிறகு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு தி.மு.க.வில் இணைந்தார். 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்.
க.சிவகாமசுந்தரி
கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முதல் முறையாக குளித்தலையை சேர்ந்த வக்கீல் க.சிவகாமசுந்தரி போட்டியிடுகிறார். இவருக்கு 51 வயதாகிறது. இவர் பி.ஏ., எம்.ஏ. பி.எட்., படித்து உள்ளார். 1996-ம் ஆண்டு தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். 2005 முதல் குளித்தலை வழக்கீல் சங்க துணைத்தலைவராக உள்ளார். இவரது கணவர் பெயர் சங்கர்.
பி.ஆர். இளங்கோ
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக முதல் முறையாக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மொஞ்சனூர் ராமசாமியின் மகன் பி.ஆர். இளங்கோ போட்டியிடுகிறார். இவரது பெற்றோர் ராமசாமி-சகுந்தலா. இவருக்கு 51 வயதாகிறது. சொந்த ஊர் க.பரமத்தி ஒன்றியம், மொஞ்சனூர் ஊராட்சி காளிபாளையம். இவர் பி.இ. படித்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், நிதின் சக்திவேல் என்ற மகனும் உள்ளனர். தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர், கீழ்பவானி பாசன சபை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், க.பரமத்தி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து வருகிறார்.
ரா.மாணிக்கம்
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2-வது முறையாக முன்னாள் எம்.எல்.ஏ. ரா.மாணிக்கம் போட்டியிடுகிறார். இவருக்கு 62 வயதாகிறது. பி.யூ.சி படித்த இவர் குளித்தலை சுங்ககேட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் வட்ட செயலாளர், நகர துணை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, குளித்தலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கி தலைவர், வீட்டு வசதி சங்க தலைவர், மாவட்ட கூட்டுறவு அச்சக துணை தலைவர், திருச்சி மத்திய கூட்டுறவு இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் வகித்துள்ளார். தற்போது வரை குளித்தலை நகர செயலாளராக உள்ளார்.
எம்.எல்.ஏ.வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை
குளித்தலை எம்.எல்.ஏ.வாக உள்ள இ.ராமருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
Related Tags :
Next Story