ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல். கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.


ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல். கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
x
தினத்தந்தி 13 March 2021 12:54 AM IST (Updated: 13 March 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டையில் ஓடும் ரெயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய கேரளாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

போலீசார் சோதனை

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி ரெயில்களில் பணம், பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மார்க்கமாகச் சென்ற அனைத்து ரெயில்களிலும் ஏறி சோதனைச் செய்தனர். 

16 கிலோ  கஞ்சா

அப்போது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நின்றது. அதில் போலீசார் சோதனைச் செய்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தான் வைத்திருந்த 2 பைகளை தூக்கி கொண்டு வேறொரு பெட்டிக்குச் செல்ல முயன்றார்.

அவரை போலீசார் பிடித்து பைகளில் சோதனைச் செய்தனர். அதில் 8 பண்டல்களாக 16 கிலோ எடையில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ரூ.1½ லட்சம் மதிப்பு

அவர், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் மைநாடு பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன்பிள்ளையின் மகன் சுனில்குமார் (வயது 51) எனத் தெரிய வந்தது. அவர், கேரளாவில் வியாபாரம் செய்ய ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகக் கூறினார்.

இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, வேலூர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story